தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக உருவாக்கம்

ஊழல் தடுப்பு குறித்த சந்தானம் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு 1964 ஆம் ஆண்டு தற்சார்புடைய விழிப்புப்பணி ஆணையத்தை அமைத்தது. இதன் அடிப்படையில், பெரும்பாலான மாநிலங்களில், மத்திய அரசின் மாதிரியைப் போன்ற விழிப்புப்பணி ஆணையங்கள் அமைக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு, 1965 ஆம் ஆண்டு, விழிப்புப்பணி ஆணையரின் தலைமையில் மாநில விழிப்புப்பணிக் குழுவை அமைத்தது. விழிப்புபணி ஆணையர், சென்னை, நிருவாகச் சவால்களை பொது சேவைகளில் ஊழலைத் தடுத்தல் மற்றும் தனிப்பட்ட ஊழல் வழக்குகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகையில் கையாளப்பட வேண்டிய நடைமுறை ஆகியவை தொடர்பாக அரசிற்கு ஆலோசனைகளை வழங்குகிறார்.

முறையற்ற அல்லது ஊழல் நோக்கங்களுக்காக, தனது அதிகாரங்களைப் பயன்படுத்தும் அல்லது அதிகாரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் அரசுப் பணியாளர் ஒருவரைப் பற்றிய யாதொரு தகவல் குறித்தும் விசாரணையை மேற்கொள்ள அல்லது விசாரணைக்கான காரணம்/புலனாய்வை மேற்கொள்ள இந்த ஆணையத்திற்கு எல்லை வரம்பும் அதிகாரமும் உள்ளது.

பொது நிருவாகத்தில் ஊழலைக் கையாளுவது தொடர்பான முதல் நடவடிக்கையாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினை தமிழ்நாடு அரசு அமைத்தது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அரசின் நிருவாகத்துறையான மனிதவள மேலாண்மை (N) துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. அரசுப் பணியாளர்களுக்கு எதிரான விசாரணை மற்றும் புலனாய்வு விவரங்கள் தொடர்பான, விசாரணைகள்/புலனாய்வின் முடிவுகள் குறித்த அறிக்கைகள் மேற்கொண்டு மேல் நடவடிக்கை எடுப்பதற்காக விழிப்புப் பணி ஆணையருக்கு அனுப்பப்படும்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் முக்கியச் செயல்பாடுகள்:

அ) மாநில விழிப்புப் பணி ஆணையத்தால்/அரசால் மற்றும் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் தொடர்புடைய முறைகேடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துதல்.
ஆ) இயக்குநரகத்தால் சேகரிக்கப்பட்ட தகவல் மற்றும் புள்ளிவிவரங்களை மாநில விழிப்புப் பணி ஆணையத்திடம் வழங்குதல்.
இ) அரசுப் பணியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றசாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்துதல்.
ஈ) கையூட்டு மற்றும் ஊழல் வழக்குகள் தொடுப்பதற்கான புலனாய்வு தகவல்களைச் சேகரித்தல் மற்றும் 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் 26/07/2018 அன்று நடைமுறைக்கு வந்த திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 2018 வரம்பு எல்லைக்குள் வரக்கூடிய குற்றங்களை விசாரணை செய்தல்.
உ) நம்பத்தகுந்த புகார்கள் குறித்து, உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு பொறிவைப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு அரசுப் பணியாளர்கள், கையூட்டு வாங்கும்போது பொறிவைத்து கையும் களவுமாகப் பிடித்தல்.

தற்போது, தமிழ்நாடு முழுவதும் 46 துணைப்பிரிவுகள் உள்ளன.

விரைவான நீதிமன்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, 2011 ஆம் ஆண்டில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளின் விசாரணைகளுக்காகவே, சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சியில் தலா ஒன்று என நான்கு சிறப்பு நீதிமன்றங்களை அரசு நிறுவியுள்ளது. 2013-14 ஆம் ஆண்டின் போது, விழுப்புரம், சேலம், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் என நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

10.09.2014 அன்று, ஊழல் தடுப்புச் சட்டம் (1988)ன் கீழ் வரும் வழக்குகளைத் தீர்ப்பதற்கு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு நீதிமன்றங்கள்/ துணை நீதிபதிகளுக்கான நீதிமன்றங்களில் பணியாற்றும் முதன்மை தலைமை நீதிபதிகள் / சிறப்பு நீதிபதிகளுக்கு அரசு அதிகாரம் அளித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 36 நீதிமன்றங்கள் உள்ளன.

தற்போது சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் ஆறு ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்/மாவட்ட வருவாய் அலுவலர்கள் தரத்தில் உள்ள ஒழுங்குநடவடிக்கை தீர்ப்பாய ஆணையர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தின் விசாரணைகள், பரிந்துரைக்கப்பட்டு அவரது தலைமையில் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான வழக்குரைஞர்களின் உதவியுடன் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தின் செயல்பாடு குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அரசு கண்காட்சியான "சென்னை வர்த்தகக் கண்காட்சியில்" அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அரங்கில், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய எண்மமுறையில் அச்சிடப்பட்ட பதாகைகள் மற்றும் இயக்குநரகத்தின் செயல்பாடுகள் குறித்து மூத்த அதிகாரிகள் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலமைந்த ஊழலுக்கு எதிரான காணொலிக் காட்சிகளைப் பொதுமக்களுக்குத் திரையிடுதல் போன்றவை பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தப்படுகின்றன.

ஒரு முதல் நடவடிக்கையாக அனைத்து அரசு துறை அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பின்வரும் செய்தியை அறிவிப்புப் பலகையில் காட்சிபடுத்துமாறு அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

”கையூட்டு பெறுவது சட்டத்திற்கு எதிரானது. கையூட்டு தொடர்பான புகார்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்திற்கு அனுப்பப்படலாம்.”

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகம் இரண்டு கட்டணமில்லா தொலைபேசி எண்களைக் கொண்டுள்ளது. (1) ஊழல் எதிர்ப்பிற்கான உதவி அழைப்பு எண் 1064 மற்றும் (2) விழிப்புப் பணி அழைப்பு எண் - 1965, இதன் வாயிலாகப் புகார்தாரர்கள் புகார் செய்யலாம்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகம் எண்.293, எம்.கே.என். சாலை, ஆலந்தூர் , சென்னை- 600016 என்ற முகவரியில் உள்ள அரசு கட்டடத்தில் மே’2016 முதல் செயல்பட்டு வருகிறது.